ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னை- குவைத் இடையே புதிய நேரடி விமான சேவையை நேற்று (மார்ச் 3) முதல் தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து குவைத்துக்கு இதுவரை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்லைன்ஸ், ஜாகீரா ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்கள் நேரடி பயணிகள் விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த 4 விமானங்களிலுமே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், நேற்று முதல் சென்னை- குவைத்- சென்னை இடையே, புதிய பயணிகள் விமான சேவையை தொடங்கியுள்ளது.
இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வாரத்தில் 5 நாள் (செவ்வாய், சனிக்கிழமை) தவிர, மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு குவைத்திற்கு செல்கிறது. அந்த விமானம் மீண்டும் குவைத்தில் இருந்து, அதிகாலை புறப்பட்டு காலை 6.35 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
இந்த சேவை நேற்று முதன்முதலாக தொடங்கியது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து தினசரி விமானமாக இயக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. சென்னையில் இருந்து குவைத்துக்கு 5 நேரடி விமானங்கள் சென்று வருவதால் தொழில், வர்த்தக பணிக்காக செல்லும் பயணிகளுக்கு, மிகவும் வசதியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“