இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விமான சாகச காட்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிக்க லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாக திரண்டனர். 15 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் வந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது.
மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்ட நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் செய்தனர். அவர்களின் பணியை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அகற்றப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் இருந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கும் சிறு குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்பட்டன. 128 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“