'மாமனிதர் ஐராவதம் மகாதேவன் இறுதிச் சடங்கில் வெறும் 40 பேர்' - கேஎஸ் ராதாகிருஷ்ணன் வேதனை

சர்க்கார் போன்ற திரைப்படங்கள், மீடு போன்ற தேவையற்ற பிரச்சனைகளை பேச்சுகளில் அக்கறை காட்டுவது தான் நமக்கு முக்கியம்.

சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், கடந்த நவ.26ம் தேதி தனது இல்லத்தில் உடல் நலக் குறைவால் காலமானார். ஐராவதம் மகாதேவன், 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக பணியாற்றிய இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார்.

கல்வெட்டு துறை கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞரும் கூட. சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.

இந்த நிலையில், உடல்நிலை காரணமாக கடந்த 26ம் தேதி அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார். ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் தமிழறிஞர்கள், முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால், அவரது இறுதிச் சடங்கில் வெறும் 40 பேர் மட்டும் கலந்து கொண்டதாக வழக்கறிஞரும் திமுக செய்தி தொடர்பு செயலாளருமான கேஎஸ் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது, “ஒரு மாமனிதர் மறைந்தபோது நடைபெற்ற இறுதிச் சடங்கில் 40 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதுதான் நமது தமிழ் பண்பாடா, கலாச்சாரமா, அக்கறையா? சர்க்கார் போன்ற திரைப்படங்கள், மீடு போன்ற தேவையற்ற பிரச்சனைகளை பேச்சுகளில் அக்கறை காட்டுவது தான் நமக்கு முக்கியம். நமக்கு ஐராவதம் மகாதேவன் போன்ற ஆளுமைகளை கண்டுகொள்ளவேண்டிய அவசியமில்லை.

அதற்கான அவகாசமும், நேரமும் நமக்கு இல்லை. இது தான் வரலாற்றை படித்த தமிழகம் கவனம் செலுத்தாமல் இருந்தால் அண்ணா சொன்னவாறு வடபுலம் நம்மை தாழ்ந்த தமிழகம் ஆக்கிவிட்டது என்றார். இப்படியான நியாயங்களை எல்லாம் மறுதலித்து தேவையற்ற கசடுகளில் அக்கறை காட்டும் நாம் நாமே நமது மண்ணை தாழ்ந்த தமிழகம் நாமே ஆக்கிவிடுவோமோ என்ற ஐயப்பாடு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close