ஏர்செல் சேவை திடீர் நிறுத்தம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் விரைவில் கடையை சாத்தவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன

நாடு முழுவதும் பல  இடங்களில், ஏர்செல் சேவை செயலிழந்துள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள வாடிக்கையாளர்கள்  ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்,

இந்தியாவின் 6 ஆவது மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் தற்போது தனது வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஏமாற்றியுள்ளது. நேற்று (21.2.18) முதல் தமிழகம் உட்பட பல இடங்களில் ஏர்செல் நிறுவனத்தில் செல்லிடப்பேசி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.  காலிங், மெசேஜ், டேட்டா என அனைத்து வசதிகளும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதனால், அந்நிறுவனத்தின் சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஏர்செல் நிறுவனத்தைப் போல் டெலிகாம் சந்தையில் இருக்கும் ஏர்டெல், ஜியோ போன்ற மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் விரைவில் கடையை சாத்தவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.  இதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்  குமரன் நகரில்  உள்ள ஏர்செல் நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் அலுவலகம் முன்பே  போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களிடம் புகார்களை வாங்கிக்கொண்டு கூட்டத்தை கலைத்தனர்.இதே போல, கரூரிலும் தங்களது தொழில் உள்ளிட்ட அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி ஏர்செல் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.  இதனைப் போன்ற ஏர்செல் அலுவலகம் அமைந்துள்ள அனைத்து இடங்களிலும் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அதிகாரிகள் கடைகளை மூடி விடுகின்றனர்.

இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ஏர்செல் நிறுவனத்தின் , தென் மாநில தலைவர், சங்கரநாராயணன் ”நாங்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை, பயன்படுத்துகிறோம். இரு தரப்புக்கு இடையே, நிதி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்கள் திடீரென கோபுரங்களை மூடிவிட்டதால், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதியை, பீதி காரணமாக, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஒரே நேரத்தில் பெற முயற்சித்ததால், அந்த, ‘சர்வர்’ செயலிழந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

ஏர்செல் நிறுவனம் முன்பாக ஏர்டெல், ஜியோ போன்ற போட்டி நிறுவனங்களின் தற்காலிக விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு புதிய சிம்கார்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்  ”தொழில்நுட்ப கோளாறு காரணமாக தங்களின்  சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் இது சரிசெய்யப்படும் என்று பதிவிட்டுள்ளது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close