நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 200 சவரன் தங்க நகைகள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர, நவரத்தின நகைகள் திருட்டுப் போனதாக புகார் அளித்திருந்தார். மேலும், அந்தப் புகாரில் தனது வீட்டில் வேலை செய்துவந்த பணிப்பெண்கள் ஈஸ்வரி உட்பட சிலர்மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை மந்தவெளியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்க, வைர, நவரத்தின நகைகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் சில தினங்களுக்கு முன்பு ஈஸ்வரியை கைதுசெய்தனர். ஈஸ்வரி அளித்த தகவலின்படி திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இரண்டு பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் புகாரில் குறிப்பிட்ட தங்க, வைர, நவரத்தின நகைகளைவிட ஈஸ்வரி தரப்பினரிடமிருந்து கூடுதலாக நகைகள் மீட்கப்பட்டன. இதனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் எவ்வளவு என்ற சந்தேகம் எழுந்தது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை ஈஸ்வரி, தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விற்றும், அடமானமாக வைத்தும் பணம் பெற்றியிருக்கிறார். அதை வைத்து மளிகைக் கடை, காய்கறி கடை, சோழிங்கநல்லூரில் பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஈஸ்வரியிடமிருந்து தங்க நகைகளைத் வாங்கிய குற்றத்துக்காக மயிலாப்பூரைச் சேர்ந்த அடகுக்கடைக்காரர் வினால்க் சங்கர் நவாலி என்பவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், வீட்டு ஆவண பத்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட பணிப்பெண் ஈஸ்வரியை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் கொடுத்ததைவிட திருடிய நகைகள் அதிகம் எனத் தெரியவந்தது. அதனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் போலீஸார், எவ்வளவு நகைகள் திருடப்பட்டன என விசாரித்தனர்.
அதன்பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லாக்கரிலுள்ள அனைத்து நகைகளையும் சரிபார்த்துவிட்டு புதிய புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புதிய புகாரில், 200 சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈஸ்வரியிடம் இருந்து இதுவரை 143 சரவன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புதிய புகாரின் அடிப்படையில், போலீசார் நகைகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“