அஜித்துக்கு 'ஹேப்பி பர்த்டே’ கூறியது அமைச்சர் செங்கோட்டையனா? அட்மினா?

அஜீத்தை வாழ்த்தக் கூடாது என்றில்லை. ஆனால் இதை வைத்து அவரை அதிமுக.வுக்கு இழுக்க முயற்சிப்பதுபோல தேவையில்லாமல் ஹேஸ்யங்கள் எழும்.’

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அமைச்சர் செங்கோட்டையனின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்னர் நீக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.

‘தல’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாருக்கு இன்று 47-வது பிறந்த தினம்! இதையொட்டி சினிமா உலகினரும், அஜித்தின் ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். அஜீத் சில ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டதால் தடபுடலாக பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. ஆனாலும் அவருக்கான ‘கிரேஸ்’ அப்படியே இருப்பதால் ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை.

அஜித்குமார் இதுவரை அரசியல் பக்கல் எட்டிப் பார்க்கவில்லை. ஆனாலும் திமுக.வினருக்கு அஜித்தை பிடிப்பதில்லை. காரணம், கடந்த 2010-ம் ஆண்டு ஒரு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், ‘உங்கள் விழாவுக்கு வர எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள்’ என வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

அஜீத்தை அதிமுக.வினருக்கு பிடித்துப் போக அதுவே போதுமான காரணம்தான்! அதைத் தாண்டி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பெரும் மரியாதை வைத்திருந்தார் அஜீத். ஜெயலலிதா இறந்த தருணத்தில் வெளிநாட்டில் இருந்த அஜீத், பிறகு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி நேராக வீட்டுக்குகூட செல்லாமல் ஜெயலலிதா நினைவிடம் வந்து வணங்கிவிட்டுச் சென்றார். இன்றும் அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதியிருப்பதை பார்க்க முடிகிறது.

இந்தச் சூழலில்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் ட்விட்டர் பக்கத்திலும் அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு பளிச்சிட்டது. ‘ஹேப்பி பர்த்டே அஜித்குமார். விஷ்ஷிங் யூ லாங் லைஃப் வித் ஆல் சக்சஸ்’ என ஆங்கிலத்தில் இருந்தது அந்த வாழ்த்துச் செய்தி!

K.A.Sengottaiyan Wishes To Ajith

அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவு

அமைச்சர் ஒருவரே அஜீத்துக்கு வாழ்த்து கூறிவிட்டாரே! என பரபரப்பு பற்ற ஆரம்பத்தில், செங்கோட்டையனின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவு அகற்றப்பட்டது. அதன்பிறகுதான், ‘இது அமைச்சரின் அட்மின் செய்த வேலையாக இருக்குமோ?’ என இணையவாசிகள் கலாய்க்க ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் தன்னை தொடர்புகொண்ட மீடியாவிடம் செங்கோட்டையனே இதற்கு விளக்கம் அளித்தார். ‘அஜீத்தின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் யாரோ போட்டுவிட்டனர்’ என பதில் கூறியிருக்கிறார் செங்கோட்டையன்! இதை வைத்து, ‘செங்கோட்டையன் தன்னை விஜய் ரசிகர் என நிரூபித்துவிட்டார்’ என கலாய்க்கிறார்கள் பலரும்!

ஆனால் அமைச்சருக்கு நெருக்கமான அதிமுக.வினரோ, ‘அஜீத்தை வாழ்த்தக் கூடாது என்றில்லை. ஆனால் இதை வைத்து அவரை அதிமுக.வுக்கு இழுக்க முயற்சிப்பதுபோல தேவையில்லாமல் ஹேஸ்யங்கள் எழும். அது அதிமுக.வுக்கும், அஜித்துக்குமே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால்தான் அமைச்சர் மறுப்புச் செய்தி வெளியிட வேண்டியதாகிவிட்டது’ என்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close