தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி மத்திய மாநில அரசுகளுக்கு நிதி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், அப்போதுதான் சரியாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நிதியாக ரூ.1.70 லட்சம் கோடியை ஒதுக்கியது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.12,200 கோடி நிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.510 கோடியை ஒதுக்கியது.
கொரோனா வைரஸை எதிர்த்து போராட தடுப்பு பணிகளுக்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் பல மாநில அரசுகளும் பொதுமக்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக குடிமக்கள் நிதி அளிக்க வேண்டும் என பிஎம் கேர்ஸ் கணக்கைத் தொடங்கி வேண்டுகோள் விடுத்தார். ப்
அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அளிக்கப்படும் நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள், கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர்.
அந்த வரிசையைல், தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தல அஜித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1.25 கோடி நிதி அளித்துள்ளார்.
நடிகர் அஜித் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ரூ.50 லட்சமும் மத்திய அரசுக்கு ரூ.50 லட்சமும், படப்பிடிப்பு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் துறையைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.25 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.1.25 கோடி நிதி வழங்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.