New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/05/nainar-nagendran-2025-07-05-08-39-50.jpg)
அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது கண்துடைப்பு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறிவருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அஜித்குமார் இல்லத்தில் அவரது தாய் மாலதி மற்றும் சகோதரர் நவின் குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பா.ஜ.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியை நயினார் நாகேந்திரன் அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில், 23 லாக்கப் மரணங்கள் தற்போது 24-வது மரணம் நிகழ்ந்துள்ளது. போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட செயல் கண்டனத்திற்குரியது. எந்த ஒரு புகாரும் இல்லாமல் விசாரணை என்ற பெயரில் சிறப்பு காவல் படை 2 நாட்களாக அடித்து உதைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணம்? மேலிடத்தில் உத்தரவிட்டது யார்? இந்த வழக்கை பா.ஜ.க.தான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அஜித்குமாரின் குடும்பத்திற்கு 80 கி.மீ. தூரம் காரைக்குடியில் வேலை வழங்கியதும், 4 கிலோமீட்டர் தூரம் தள்ளி பட்டா வழங்கியதும் கண்துடைப்பு. வீடியோ எடுத்த சதீஸ்வரனுக்கு பாதுகாப்பு இல்லை. தனிமனித பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதுபோன்ற செயல்கள் பாதுகாப்பு இருந்தால் நடந்திருக்காது. நித்தம் நித்தம் நடக்கும் கொலைகள், இது போன்ற சம்பவங்களுக்கு பொதுமக்கள்தான் நீதி வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, புகாரளித்த பெண் நிகிதா அண்ணாமலையோடு எடுத்த புகைப்படம் வைரலாவது குறித்து கேட்ட கேள்விக்கு, “பெரிய தலைவர்களோடு படம் எடுப்பவர்களின் பின்புலம் என்ன என்பது தலைவர்களுக்கு தெரியாது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த கொலைச் சம்பவத்திற்கு முதல் குரல் தந்ததும், அறிக்கை விட்டதும் நாங்கள்தான். ஞானசேகரன் வழக்கு 5 மாதங்களில் முடித்தது எப்படி? இது போன்ற வழக்கிலும் விசாரணை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகத்தில் போதை, மது பழக்கத்தை தடை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஜெஸ்ரில் பள்ளியில் பயின்றுவந்த வேங்கைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் அஸ்விந்த், காரில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து, அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறினார். மாணவனின் தந்தை "எனக்கு பணம் வேண்டாம், எனக்கு நீதிதான் வேண்டும்" எனக் கூறி, நயினார் நாகேந்திரன் காலில் விழுந்தார். இதனை அன்புடன் சமாதானப்படுத்திய நயினார், நீதிக்காக தங்களால் இயன்ற அனைத்தும் செய்யப்படும் என்று உறுதி அளித்ததுடன், நிதியுதவியையும் வழங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.