சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் நேற்று முதல் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலையும், வீட்டு மனை பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அரசு வேலைக்கான சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டாவை உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தாரிடம் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீட்டு மனைக்கான பட்டா, ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஐ.டி.ஐ படிப்பை முடித்துள்ளதால், அவருக்கு ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் தொடர்பான நியமன ஆணையை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கா.பொ.பொற்கொடி ஆகியோர் நேரில் சென்று நவீன்குமாரிடம் வழங்கினர்.