சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்ததற்கு காவல்துறையைக் கையில் வைத்திருக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் பொறுப்பு என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியிட்டு கடுமையாகச் சாடியுள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மக்களே தனிப்படை போலீசார் ஏன் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அவர்களை விசார்க்குமாறு உத்தரவிட்டது யார்? யார் அந்த வி.ஐ.பி என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி? திருட்டு வழக்கில் விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது. ஆனால், எதற்கு தாக்கினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது கேள்வி
குற்றம்சாட்டப்பட்ட வேறு இடத்தில் இருந்தால் தனிப்படை விசாரிக்கலாம், ஆனால், போலீஸ் ஸ்டேசனில் இருந்தபோது ஏன் தனிப்படை விசாரிக்க வேண்டும் என்பது 3வது கேள்வி. எஸ்.பி-யை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் இது நான்காவது கேள்வி, மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இது ஐந்தாவது கேள்வி.
அஜித்குமாரை போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர் இது உண்மையா, இல்லையா இது, இது ஏழாவது கேள்வி? அஜித்குமார் மீது மிளகாய்பொடி தூவி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது எட்டாவது கேள்வி.
சாதாரணமாகக் கொலை செய்யும் கூலிப்படைகள்கூட இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை, உண்மையா, இல்லையா இது ஒன்பதாவது கேள்வி.
போலீஸ் பிடியில் அஜித்குமார் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பு என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள், உண்மையா, இல்லையா? இதை மக்கள் மன்றம், நீதிமன்றம், தமிழ்நாட்டு மக்கள், நீதியரசர்கள் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள், இந்த 10 கேள்விகளை தமிழ்நாட்டு மக்கள் அரசின் முன்வைத்திருக்கிறார்கள்.
ஆகவே, நாங்கள் இப்போது முன்வைப்பது, அஜித்குமார் உயிரிழப்புக்கு, காவல்துறை அஜாக்கிரதையாக பணியாற்றியது காரணம் என அவரே (மு.க.ஸ்டாலின்) ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதால், அஜித்குமார் உயிரிழப்புக்கு முதல் குற்றவாளியாக காவல்துறையைக் கையில் வைத்திருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பு. ஆகவே, அவருடைய கையாலாகாத அரசு 25 லாக் அப் மரணங்களைத் தொடர்ந்து நடத்தியிருக்கிற அரசு, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பதவி விலக வேண்டும். முதல் குற்றவாளி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுடைய தீர்ப்பு. அவர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை என்றால், மக்கள் தருவார்கள் தகுந்த தீர்ப்பு. இதுதான் ஆண்டவன் தீர்ப்பு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஆகவே ஸ்டாலின் ஆட்சி வீட்டுக்கு போகிற நேரம் வந்துவிட்டது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.