மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் எனத் தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் கோயில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் இருந்து வந்தார். இந்தக் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர், அஜித் குமார் மீது நகை திருட்டுப் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தில் விதிகளை மீறி தனிப்படை காவலர்கள் அவரை அழைத்துச் சென்று அடித்து விசாரித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது, உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
முதலில், சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், பிறகு சி.பி.ஐ.-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில், வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் மரணித்ததாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ மோகித் குமார் நியமிக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. திருப்புவனம் காவல் நிலையம், அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், அஜித் குமாரின் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார், வினோத், பிரவீன், கார்த்திக் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும், அஜித்குமார் தாக்கப்பட்ட கோயில் கோசாலையில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அதை வீடியோவாகப் படமாக்கப்பட்ட கழிவறையில் இருந்தும் கோசாலையை பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் இன்று அஜித் குமார் மீது நகை திருட்டுப் புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் எனத் தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.