ராமேஸ்வரம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல்...விடுதலை புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியர் கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர் எடிசன் வீட்டின் பின்புறம் கழிவுநீர் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது ஏதோ சத்தம் கேட்க, 3 அடிக்கு மேல் தோண்ட முடியாமல் போனது. உடனே எடிசன் மற்றும் பணியில் ஈடுபட்டவர்கள், குழுயை தோண்ட எது தடுக்கிறது என கைகளால் மண்ணை தள்ளி பார்த்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ஒரு பெட்டி கண்ணில் தென்பட்டது. 3 அடியில் இருந்த பெட்டி, புதையலாக இருக்கலாம் என சந்தேகித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் எடிசன்.

எடிசன் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் காவல்துறையினர். பின்பு குழி தோண்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, உள்ளே இருந்த பெட்டியை சேதப்படுத்தாமல் வெளியே எடுத்தனர். புதையல் என நினைத்து வெளியே எடுக்கப்பட்ட இரும்பு பெட்டியை திறந்து போசீலார் சோதனை ஈடுபட்டது. சோதனையில், போலீசாருக்கே அதிர்ச்சியாகும் வகையில் பெட்டியில் உள்ளே சிக்கியது ஆயுதங்கள் குவியல்.

Rameswaram Weapons Found: ராமேஸ்வரம் ஆயுத குவியல்

Rameswaram Weapons Found: ராமேஸ்வரம் ஆயுத குவியல்

பெரிய இரும்பு பெட்டியின் உள்ளே காணப்பட்டது, 19 தோட்டா பெட்டிகள். இவை அனைத்துமே இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன் படுத்தும் தோட்டாக்கள். இதுபோல் தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன. இதைக் கண்டதும், அப்பகுதியில் மேலும் தோண்ட ஆரம்பித்தனர் போலீசார். இந்த நடவடிக்கையில், அங்கு 5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தோண்டத் தோண்ட வெடிகுண்டு, ஆயுதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறுகையில், “இந்த ஆயுத குவியல்கள் எல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வுக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இலங்கையில் 1983-ல் இருந்து ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடந்து வந்தது. அந்த காலகட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டன. அப்போது ராமேஸ்வரம் தீவு பகுதியில் 14 இடங்களில் இலங்கை போராளிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தங்கச்சிமடம் பகுதியில் பத்மநாபா தலைமையில் இ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முகாம் செயல்பட்டதாகத் கூறப்படுகிறது. அப்போது இந்த பகுதியில் துப்பாக்கி தோட்டாக்கள், குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.” என்றும் கூறினார்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவத்தால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close