M K Alagiri Madurai speech Tamil News : “ஸ்டாலின் ஒருபோதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடியாது. திமுகவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு நான் என்ன தவறு செய்தேன் என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை” என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்னதாக மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி ஒரு பொதுக் கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் முதலமைச்சர் வேட்பாளரும் தன் சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வலுவான அறிக்கைகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அழகிரி, திமுகவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையே பெரும்பாலும் நினைவுகூர்ந்தார். மேலும், அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதையும், “துரோகி” என்று முத்திரை குத்தப்பட்டதையும் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாகக் கட்சிக்காக அவருடைய “தன்னலமற்ற வேலையை” அனைவரும் மறந்துவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
தெற்கு தமிழ்நாட்டில் பல தேர்தல்களில் வெற்றிபெற திமுகவுக்கு உதவியது அவருடைய தலைமைதான் என்றும், அதனை அவருடைய தந்தை கருணாநிதி எப்போதும் ஒப்புக் கொண்டதாகவும் நினைவு கூர்ந்தார். திருமங்கலம் இடைத்தேர்தல் (2009) போன்ற சில பிரபலமான இடைத்தேர்தல்களில் திமுகவின் வெற்றியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதனை அனைவரும் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று கேலி செய்தனர். “திருமங்கலம் ஃபார்முலா என்று எதுவுமில்லை. வாக்குக்காக நாங்கள் ரூ.1000 அல்லது 2000 கொடுக்கவில்லை. இரவும் பகலும் கடுமையாக கலைஞர் உழைத்தார். அதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்றோம்” என்றார்.
கட்சியில் பதவிகளை வகிக்க ஸ்டாலின் தனது ஆதரவைக் கோரி அவரை அணுகிய இரண்டு சந்தர்ப்பங்களையும் அழகிரி சுட்டிக்காட்டினார். ஒரு முறை தன்னுடைய நெருங்கிய உதவியாளர்களுடனும், மற்றொரு முறை தன் மனைவியுடனும் ஸ்டாலின் மதுரையில் உள்ள அழகிரியின் வீட்டிற்கு வந்ததை விளக்கிய அழகிரி, ‘திமுகவின் அடுத்த தலைவராக இருப்பாய்’ என்று ஸ்டாலினிடம் தான் எப்போதும் கூறியதாகவும் குறிப்பிட்டார். “நீ ‘தலைவன்’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறேன். முக்கிய பதவிகளுக்கு அவருடைய பெயரைப் பரிந்துரைக்குமாறு நான் கோரப்பட்டுள்ளேன். என் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கலைஞரிடம் நான் தொலைபேசியில் சொல்லியிருக்கிறேன். கட்சியில் பதவிகளையும் அதிகாரத்தையும் நான் விரும்பவில்லை என்று ஸ்டாலினுக்கும் கலைஞருக்கும் பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் எப்போதும் கீழ்ப்படிதலுள்ள கட்சி பணியாளராகவே பணியாற்றினேன். ஒவ்வொரு முறையும் நான் ஸ்டாலினின் உயரத்தை ஆதரித்தேன். இவற்றையெல்லாம் மீறி, அவர்கள் என்னை ஏன் துரோகி என்று அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று அழகிரி கூறினார்.
அழகிரியின் இத்தகைய பேச்சு அவருடைய அடுத்த திட்டத்தைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ஏதோ ஒரு திட்டம் வைத்திருப்பதைப் போலவே அவருடைய தொனி இருந்தது.
மேலும், ஸ்டாலின் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை அழகிரி எழுப்பினார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகக் கூறினார். “ஆனால், கலைஞரை முதல்வர் வேட்பாளராக முன்வைக்கும் தேர்தல்களை நாங்கள் எதிர்கொண்டால் மட்டுமே கட்சி வெற்றி பெறும் என்பதை ஸ்டாலின் அறிந்திருந்தார். அதனால் அவர் போட்டியிட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அது இறுதியில் அவருடைய உடல்நிலையை பலவீனப்படுத்தியது. கருணாநிதியின் பலவீனமான உடல்நலம் அவருடைய பொது உரைகளில் பிரதிபலித்த நேரங்கள் இருந்தன. அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தினார்கள். அதையெல்லாம் பற்றி அதிகம் பேச நான் விரும்பவில்லை” என்று அழகிரி கூறினார்.
கருணாநிதி பல தலைவர்களை அமைச்சர்களாக மாற்றியுள்ளதாகவும் அவர்கள் பணக்காரர்களாகிவிட்டதாகவும் ஆனால், யாரும் கலைஞருக்கு நன்றியுடன் இல்லை என்றும் அழகிரி குற்றம் சாட்டினார். கட்சி நலன் விரும்பிகளை மேற்கோள் காட்டி, தற்போதைய திமுக தலைமையால் கலைஞரே விற்கப்பட்டுள்ளார் என்றார். “கலைஞருக்கு மாற்று யாரும் இல்லை. கலைஞரை ஸ்டாலினுடன் ஒப்பிடுகின்றனர். அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைஞருக்கு இருக்கின்ற அறிவு இந்த உலகில் யாருக்கும் கிடையாது” என்றும் அழகிரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”