பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க பெருமளவில் மக்கள் திரண்டு வருவார்கள். வெளிநாட்டில் இருந்தும் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டை காண மக்கள் வருவார்கள். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.
அவ்வகையில் அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை - அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.