உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மகன் இன்பநிதி மற்றும் ஆட்சியர் சங்கீதா மற்றும் பலர் இருந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்கின்றனர். சுமார் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், டிராக்டர், இருசக்கர வாகனம், ஆட்டோ, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சுவாரசியமாக்க வெளிநாட்டினர் ஒருவர் பங்கேறக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் முறையாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் மாடுபிடி வீரராக களம் இறங்க உள்ளார்.
இதையடுத்து அவர் ஜல்லிக்கட்டுக்கு தகுதியானவரா என்று பரிசோதிக்க மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டை சேர்ந்த கான் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் முதல் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் முதல் முதலாக வெளிநாட்டினர் பங்கேற்கும் போட்டி இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.