எங்கே தண்ணீர்? இரவு பகலாக தேடி அலையும் மக்கள்! எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை?

அவசர தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை வந்து விடுமோ ?

chennai water crisis :நதிகளை இணைக்காமல் தண்ணீரை எங்கே தேடுவது என்ற கேள்விக்குறி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் 33 சதவீதம்தான் பயனளிக்கிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. நதிகள் திசை மாறியதன் விளைவாக ஒருபக்கம் வெள்ளத்தின் சீற்றம், இன்னொரு பக்கம் வறட்சியின் கோர தாண்டவம் நீடிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகி கொண்டே போகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் சென்னை சந்தித்திராத தண்ணீர் பிரச்சனை இப்போது ருத்ரதாண்டவம் எடுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா தண்ணீர் தரவில்லை எனில் அவர்களை நெஞ்சார வசை பாடி விட்டு அந்தந்த மாநில மக்களுக்கு எதிராக, நல்ல “தரமான” தமிழில் உயர குரல் கொடுத்தால் நம் தண்ணீர் தேவை முடிந்து விடுமா? இல்லை தமிழகத்தின் வருட மழை அளவு எவ்வளவு? ஒரு சில வருடம் தவிர்த்து, இயற்கை நமக்கு கொடுக்கும் மழை எந்தவிதத்திலும் அண்டை மாநிலத்தில் பெய்யும் மழைக்கு குறைவல்ல.

ஆனால் இந்த வருடம் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்து விட்டது பருவ மழை. குறிப்பாக சென்னையில் மழை சாரலை பார்த்து விட மாட்டோமா? என்ற ஏக்கத்தில் மக்கள் காய்ந்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு நீண்ட நாளுக்கு பிறகு ஃபனி புயல் உருவானது. அது தமிழகம் அருகே அதாவது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வாறு கடந்தால் இந்த ஃபனி புயல் நல்ல மழையை கொடுத்து சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை முற்றிலும் போக்கிவிடும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் வழக்கம் போல் நமது துரதிருஷ்டம் நமக்கு முன்னால் போய் நின்றுவிட்டது.

எங்கே தண்ணீர் கிடைக்கும் ? என்று மக்கள் குடங்குகளுடன் வண்டிகளிலும், ஆட்டோக்களிலும் இரவு பகலாக சென்னையை வட்டமிட்டு வருகின்றனர். குடிசை வீட்டில் இருந்தாலும் சரி,கோபுரத்தில் இருந்தாலும் சரி அனைவரும் ரோட்டில் இறங்கி வந்து லாரியில் வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் நிலை தான் இப்போது.

IT யில் வேலை செய்பவனும், கூரியர் கம்பெனியில் வேலை செய்பவரும், பேப்பர் போடும் பையனும், ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்மணியும் , ஜாதி மத வயது பாலின பேதமின்றி குடத்துடன் ஓடி வந்து வரிசையிலும், வரிசையில் இல்லாமலும் நிற்கும் இடமாக தண்ணீர் வண்டி நிற்கும் இடம் உள்ளது.

தண்ணீர் தான் இப்பொது மக்களை யோசிக்க வைக்கிறது…தப்பு பண்ணிட்டோமோ..! என யோசிக்கிறார்கள்..கொஞ்சம் மழையடித்து தண்ணீர் கிடைத்துவிட்டால் மறுபடியும் மறந்து போய்விட இனி முடியாது. தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு அந்த புத்தியை மக்களுக்கு கொடுப்பதற்காகவே வந்திருப்பதாக தெரிகிறது.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இப்போது தண்ணீர் பஞ்சத்தில் ஆட்டம் கண்டு வருகிறது. தண்ணீர் இல்லாததால் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்படுகின்றன. அவசரத்திற்கு பொதுக்கழிப்பிடம் பக்கம் ஒதுங்கினால் அங்கு பெரிய சைசில் போர்டு தொங்குகிறது.”தண்ணீர் பற்றாக்குறை தற்காலிகமாக கழிப்பிடம் மூடப்பட்டுள்ளது” இப்படியே போனால் கடைசியில் அவசர தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை வந்து விடுமோ என்ற பயம் சென்னை மக்களை வாட்டி வதைக்கிறது.

ஒருபுறம் தமிழக அரசு தண்ணீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக் கூறி வருகிறது. சென்னை நகர வாசிகளை அழைத்து கேட்டால் ”அட போங்கப்பா! தண்ணி முதலே எங்க வருது குழாய்ல. லாரியில் வந்தாலும் வீடுக்கு 4 குடம் தான் கிடைக்குது. சராசரியாக 4 பேர் வாழும் குடும்பத்திற்கு 4 குடம் போதுமா? சொன்ன நம்ப மாட்டீங்க எங்க தெருவுல சிலர் இரவு நேரத்தில ஒரு குடம் 20 ரூபாய்னு வந்து விக்கிறாங்க. காசு போனா போகுதுனு நாங்க அவங்க கிட்ட தான் வாங்கிக்கிறோம்” என்ற அதிர்ச்சி தகவலையும் நமக்கு தருகிறார்கள்.

போற போக்க பார்த்தா தண்ணீர் பிஸினஸும் செம்ம வருமானம் நீட்டுவது உறுதியாகியுள்ளது. எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. உலகில் தண்ணீர் இல்லாத நகரமாக தென் ஆப்ரிக்காவிலுள்ள கேப்டவுன் நகரம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. 40 லட்சம் மக்கள் வாழும் நகரத்திற்கு நீண்ட காலமாக இந்த அச்சுறுத்தல் இருந்தும் தண்ணீருக்கு வழி காணப்படாமல் மக்கள் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, எதிர்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் கதி என்னாகும் என்று அஞ்ச வேண்டி உள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close