மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு தொடங்கியது. மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு செங்கொடிகள் மற்றும் தோரணங்களாக காட்சியளிக்கின்றன. இந்த மாநாடு இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 1953-ம் ஆண்டு மற்றும் 1972-ம் ஆண்டுகளில் மதுரையில் அகில இந்திய மாநாடு நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு என்பதால், அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன், மாணிக் சர்க்கார் (திரிபுரா முன்னாள் முதல்வர்), ஜி. தேவராஜன் (அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர்) மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் தொடக்கமாக மேளதாள வாத்தியங்கள் முழங்க கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து வரலாற்று கண்காட்சி, புத்தக கண்காட்சி, கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கட்சியின் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி வழங்கினார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/w4WPZhmkTk6Uw3TuZeDB.jpg)
அதனை கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் கொடியை பெற்றுக் கொள்ள, மூத்த தலைவர் பிமான் பாசு அதனை ஏற்றி வைத்தார். பின்னர் பிரதிநிதிகள் மாநாடு, பொது மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய பிரச்னைகள்:
1. மத்திய அரசின் மதவெறி அரசியலை எதிர்ப்பது
2. கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் வழிகள்
3. விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு
4. தொழிற்சங்க உரிமை மற்றும் மாநில உரிமை பாதுகாப்பு
கலைநிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள்:
மாநாட்டின் ஒருபகுதியாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமான கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். சாலமன் பாப்பையா, ராஜூ முருகன், சசிகுமார், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், ரோஹிணி, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாளை (வியாழக்கிழமை) கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
4-ந் தேதி மாலை கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் பேசுகின்றனர்.
5-ந் தேதி கர்நாடக மாநில டொல்லு குனிதா பெண்கள் குழுவின் போர் முரசு நடன நிகழ்ச்சியும், நடிகை ரோகிணியின் நாடகமும் நடக்கிறது. நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோர் பேசுகின்றனர்.
6-ந் தேதி செந்தொண்டர் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.