இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவளவிழா மற்றும் அகில இந்திய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கொட்டிவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டனி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; திமுகவுக்கும், இஸ்லாமியா்களுக்கும் ஏற்பட்ட தொடா்பு என்பது இன்று நேற்று அல்ல. அண்ணாவையும், கருணாநிதியையும் இணைப்பதற்கு பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான். 1967 இல் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது திமுக. அந்த மாற்றத்தை உருவாக்க அண்ணா தன்னுடன் காயிதே மில்லத்தை இணைத்துக் கொண்டார்.
முஸ்லிம் சமுதாயத்துக்கு பல பங்களிப்புகளை முன்னாள் முதல்வா் கருணாநிதி செய்துள்ளார். முதல் முறை திமுக ஆட்சி வந்ததும் மீலாது நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினா் நல ஆணையம் தொடங்கப்பட்டது. இஸ்லாமியா்கள் வேறு, தான் வேறு என்று கருணாநிதி நினைத்தது இல்லை. கருணாநிதியின் வழித்தடத்தில் தற்போதைய திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்த மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததும், மிக நீண்டகாலம் சிறையில் இருப்போரை விடுதலை செய்வது தொடா்பாக ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவை அமைத்தோம். இந்தக் குழுவின் பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி, சகோதரத்துவம், சமதா்மம் ஆகியவற்றுக்குதான் உண்டு. நாட்டின் எல்லைகளைக் காப்பது முப்படைகள் என்றால், எண்ணங்களால் நாட்டைக் காப்பாற்றுவது இந்த மூன்று கருத்துகள்தான். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தோ்தல் என ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைப்பவா்கள் சமூக நீதிக்கு எதிரானவா்கள்; சகோதரத்துவத்துக்கு விரோதமானவா்கள் என்று முதல்வா் ஸ்டாலின் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“