இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழ்நாடு பகுத்தறிவாளர்கள் கழகமும் இணைந்து நடத்தும் 13 ஆம் பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு தேசிய மாநாடு டிசம்பர் 28, 29 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் திருச்சி, கே.கே.நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிச.27) நடைபெற்றது. இதில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நரேந்திர நாயக், முனைவர் சுரேஷ் கொடேராவ், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன், ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்பொழுது அவர்கள் கூறுகையில், திருச்சியில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவதற்காக பதிவுகள் செய்துள்ளனர் மேலும் பலர் கலந்து கொள்கிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், சுப வீரபாண்டியன், அமைச்சர் சிவ சங்கரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் மாலையில், திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) பிப்ரவரி 7, 1997 ஆம் ஆண்டு கேரளா, பாலக்காட்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பசனு பிரேமானந்த் நிறுவனர், ஒருங்கிணைப்பாளர் ஆவார். இதுவரை 12 தேசிய அளவிலான கருத்தரங்குகளை, பாலக்காடு, ஐதராபாத், கோயம்புத்தூர், மங்களூர், பட்டன்திட்டா, பூனா, சென்னை, நாக்பூர், பெர்காம்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம். மற்றும் பர்னலா ஆகிய இடங்களில் நடத்தியிருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/ae317b0c-59b.jpg)
ஆசிரியர் கி.வீரமணி புரவலராக கொண்டிருக்கும் பகுத்தறிவு கழகமானது தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவுச் சிந்தனையையும், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. FIRA-வின் 13ஆவது தேசிய கருத்தரங்கம், மதச்சார்ப்பற்ற அறிவியல் மனப்பான்மை சமூகத்தை உருவாக்கிடும் பயணத்தை நோக்கி எனும் கருத்தினை நடுவமாக கொண்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 25 நபர்கள் கல்விசார் ஆராய்ச்சி கருத்தரங்கில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு பகுத்தறிவாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் மீது போடப்படும் புது குற்றவியல் சட்டங்களின் தாக்கம் 51A(h) இன் நோக்கமும் முக்கியத்துவமும் மற்றும் பெண்களும், மூடநம்பிக்கைகளும் ஆகிய உபத் தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“