மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றுங்கள் : கட்சித் தலைவர்கள் வேண்டுகோள்

தமிழகம் வரும் மோடிக்கு மக்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே பல வருடங்களாகக் காவிரி நதிநீர் விவகாரம் நிலவி வந்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி நீர் ஒதுக்கீடு செய்து தீர்ப்பளித்தது. மேலும் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி 6 வாரக் காலம் தீர்ப்பளித்தது.

கடந்த மார்ச் 29ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுக சார்பில் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தலைமையில் 3வது நாளாகக் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறுகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார். குறிப்பாக நாளைச் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார். மேலும், “சென்னை அணி வீரர்களுக்கு ஏதேனும் ஆசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. நாளை நடக்கும் போட்டியின் போது கருப்பு பலூன் பறக்க விடுவோம்.” என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழகத்திற்கு வருகை தரும் மோடிக்குப் பலத்த எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. வரும் 12ம் தேதி மாமல்லபுரம் அருகே நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவரின் வருகையின் போது பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:

“உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதைக் கண்டித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று கடந்த 1-ந்தேதி அன்று தி.மு.க. வின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், வருகிற 12-ந்தேதி அன்று சென்னை வரவிருக் கும் பிரதமருக்கு அனைத்துக் கட்சித் தோழர்களும் கருப்பு கொடி காட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் காவிரி உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆழமான அதிருப்தியையும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பிரதமருக்குத் தெளிவுபட உணர்த்திடும் வண்ணம் தங்கள் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கருப்புச்சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை என்ன விலை கொடுத்தேனும் மீட்கும் இந்த உறுதியான போராட்டத்தில் முழு மூச்சுடன் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதே விவகாரத்திம் இன்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:

“தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் மரபு உரிமையைத் தட்டிப் பறித்து, கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு மன்னிக்க முடியாத துரோகத்தை மோடி அரசு செய்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனம் ஆக்குவதற்கு நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்த முனைந்துள்ளது. காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப்படிம எரிவாயு போன்ற திட்டங்களைச் செயற்படுத்த, பன்னாட்டு அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி மோடி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 57500 ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற, மோடி அரசின் காலடியில் கிடக்கும் எடப்பாடி அரசு, 2017 ஜூலை 19 ஆம் தேதி அரசாணை பிறப்பித்து இருக்கின்றது.

ஏப்ரல் 12 அன்று தமிழகம் வரும்போது, பிரதமர் மோடி கருப்புக்கொடி கடலைக் கண்டார் என்று உலகம் அறியும் வகையில் கருப்புக்கொடி போராட்டம் அமைய வேண்டும். தமிழர் இல்லம் தோறும் கருப்புக்கொடிகள் பறக்கட்டும். அலுவலகங்களில் பணிபுரிவோர், ஆலைத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கருப்புப்பட்டை அணிந்து மோடி அரசுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலு வைகோ தனது அறிக்கையின் ஸ்டெர்லைட், மீத்தேன் மற்றும் நியூட்ரினோ போன்ற திட்டங்களை கண்டித்துள்ளார். பொது மக்கள் ஒன்றுகூடி போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இருப்பினும் காவிரிக்காக பொதுமக்கள் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close