கொரோனா முன்னெச்சரிக்கையாக ‘சர்ச்’களில் பொது வழிபாடுகள் ரத்து: சென்னை மயிலை பேராயம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மக்கள் கூடுவதைத் தவிர்க்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களிலும் திட்டமிடப்பட்ட அனைத்து பொது வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் மார்ச் 31 வரை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

By: March 19, 2020, 12:19:07 PM

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மக்கள் கூடுவதைத் தவிர்க்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களிலும் திட்டமிடப்பட்ட அனைத்து பொது வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் மார்ச் 31 வரை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 8,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸுக்கு இந்தியாவும் தப்பவில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அனைத்து மாநில அரசுகளையும் மக்கள் கூடுவதைத் தவிர்க்க பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், உடற்பயிற்சி மையங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள் என அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டது. மேலும், கோயில்கள், திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற இடங்களிலும் மக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தியது.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமி, சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பங்கு தந்தையர்கள், குருக்கள் துறவியர் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் மார்ச் 31 வரை தேவாலயங்களில் அனைத்து பொது வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து அறிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பொதுமக்களுக்கு அளித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயக் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் அனைவரும் மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி, திருவழிபாடுகள் தழுவிய கீழ்காணும் தற்காலிகமான ஏற்பாடுகளை நமது சென்னை – மயிலை உயர் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகள், நிறுவனங்கள், துறவியர் இல்லங்கள், ஆகியவற்றில் நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

1. இன்று முதல் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும் ஞாயிறு கடன் திருநாள் திருப்பலிகள் மற்றும் தினசரி திருப்பலிகளில் பங்கெடுப்பதிலிருந்து இறைமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

2.தவக்காலத்திற்கென்று சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்த திருப்பயணங்கள், தியானங்கள், திருச்சிலுவைப் பாதைகள், பொது ஜெப வழிபாடுகள், பொது ஆராதனைகள் ஆகியவை கைவிடப்படுகின்றன.

3.நம் குடும்பங்களில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு கொரோனா நோயின் தொற்று வேகமாகப் பரவும் என்பதால், 60 வயதுக்கு மேற்பட்டவரக்ள் வீடுகளில் இருந்தவாறு ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு உடல் நலனைப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4.வீடுகளில் உள்ள நோயுற்றோருக்கும் நடக்க முடியாத முதியோருக்கும் பொதுவாக முதல் வெள்ளிக்கிழமைகளில் அல்லது வேறெந்த நாளிலோ திவ்விய நற்கருணை வழங்கும் வழக்கம் இருப்பின், அந்தந்த பங்குத் தந்தையர்கள் இறைமக்களின் ஆன்ம நலன் கருதி அவர்களுக்கு அருட்சாதனங்களை வழங்க ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5.ஞாயிற்றுக்கிழமைகள் ஆண்டவருடைய நாள் என்பதாலும் மேலும் இது தவக்காலமாக இருப்பதாலும் நாம் கீழ் காணும் சிறப்பு மன்றாட்டு மற்றும் ஒறுத்தல் முயற்சிகளை வீடுகளில் இருந்தவாறே மேற்கொள்ளுமாறு அழைக்கின்றேன்.

* வீடுகளில் குடும்பமாக அமர்ந்து குடும்ப செபமாலை செபித்தல், திருப்பாடல்கள் மூலம் செபித்தல், இறைவார்த்தையை வாசித்து தியானித்தல், சுருக்கமான சிலுவைப்பாதை மேற்கொள்ளல் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன.

* ஏற்ற வசதிகள் இருப்பின், மாதா தொலைக்காட்சி, அற்புதர் இயேசு டிவி மற்றும் யூடியூப் அலைவரிசை வழியாக தரப்படுகின்ற San Thome TV இணையதள சேவையைப் பயன்படுத்தி திருவழிபாடுகளில் ஆன்மீகப் பங்கேற்பு செய்து செபிப்பது வரவேற்கப்படுகிறது.

* பொதுவாகவே சென்னை மாநகரில் உள்ல அனைத்து தேவாலயங்களிலும் வழிபாடுகளின்போது மக்கள் அதிக்மாகக் கூடுவதால், இந்த் அநாட்களில் இறைமக்கள் பெரும் குழுக்களாக ஆலயங்களில் கூடுவதைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் வேண்டுமானல் தனி செபம் செய்ய ஆலயத்தைப் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

அன்புக்குரியவர்களே மிகவும் இக்கட்டான சவால் நமக்குமுன் இருப்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். ஆலயத்திற்கு வராமல், திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணையைப் பெறாமல் இருப்பது கட்டாயம் கடினம்தான். ஆயினும் இன்றைய சூழலில், நம் அடுத்திருப்பவரின் நலனையும் காப்பாற்ற வேண்டிய மேலான பொறுப்பினை உணர்ந்து, மேலே குறிப்பிட்ட ஆன்மிக ஒறுத்தல்களை கொரோனா நோயிலிருந்து நாம் முழு விடுதலை பெறுவதற்காக ஒப்புக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

“இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் செவி சாய்த்தார்” என்ற இறை வார்த்தையில் திடம் கொண்டு, காகும் இறைவன் நாம் எதிர்கொண்டுள்ள இப்போராட்டத்தில் நம்மையும் நம் உறவுகளையும் இந்த அழகான உலகத்தையும் பாதுகாப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இந்த சவாலைக் கையிலெடுப்போம். இறை இரக்கத்திற்கா தொடர்ந்து மன்றாடுவோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:All public prayers cancelled at all churches till march 31 chennai mylopore archbishop announced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X