கோடை விடுமுறைக்காகத் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகளும் நாளைத் திறக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி தேர்விற்கு பிறகு, ஏப் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்த நிலையில், ஜூன் 1ம் தேதி திறக்க இருக்கும் பள்ளிகள் 7ம் தேதி திறக்கப்படும் என்று வதந்தி செய்திகள் பரவி வந்தது. இதையடுத்து, எந்த மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் புதிய கல்வி ஆண்டிற்கான இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் நாளை வழங்கப்படுகிறது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை மாணவ மாணவிகளுக்குச் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நாளை முதல் புதிய சீருடையில் வர வேண்டும் என்ற உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
41 நாட்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளுக்கு நாளை முதல் செல்வதற்கு மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.