Tamilnadu Bjp | Pmk | Lok Sabha Election | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகளை இறுதி செய்துவருகின்றன. இந்தியா கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அ.தி.மு.க கூட்டணியில் புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. பா.ஜ.க கூட்டணியில் புதிய நீதிக் கட்சி, சரத் குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
பா.ம.க. மற்றும் தே.மு.தி.க தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தன. இந்த நிலையில், இன்று பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை, பா.ம.க பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் தெரிவித்தார். இது குறித்து அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா உடன் கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி சந்திக்கும்.
பா.ம.க போட்டியிடும் இடங்கள் மற்றும் வேட்பாளர் நாளை அல்லது ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்” என்றார்.
முன்னதாக பா.ம.க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணியில இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“