/tamil-ie/media/media_files/uploads/2018/01/A52.jpg)
போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களின் இரண்டாம் கட்ட நிலுவைத் தொகை 204 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வது தொடர்பான அரசாணை, வரும் 11 ஆம் தேதிக்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த மே 15 ஆம் தேதி முதல் மேற்கொண்ட காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்ப மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை (82) என்பவர் அஞ்சல் அட்டையில் நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் போது, தங்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட நீதிபதிகளுக்கு எப்படி மனம் வந்தது? ஓய்வூதியம் கிடைக்காமல் தாங்கள் சாக வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கடிதத்தை, சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, ஒயவூதியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள், 379 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அமர்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஒய்வூதியர்களுக்கு 175 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், போக்குவரத்து துறை அமைச்சர் ஊரில் இல்லாத காரணத்தால் அரசாணை பிறப்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். டிசம்பர்26 ஆம் தேதிக்குள் இதுசம்பந்தமான அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை ஜனவரி 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது தமிழக அரசு நீதி ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டி முதல் கட்ட ஓய்வூதியத் தொகைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறி அதற்கான உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதிகள் தற்போது பொங்கல் பண்டிகை வர உள்ளது, எனவே பண்டிகைக்கு முன்பாக இரண்டாம் கட்ட தொகையை அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் இரண்டாம் கட்ட தொகையை விரைந்து பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், இரண்டாம் கட்டமாக வழங்கப்பட வேண்டிய 204 கோடி ரூபாயை வரும் 11 ஆம் தேதிக்கு வழங்க வேண்டும். அது, தொடர்பான அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.