நடிகை அமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகாரின்பேரில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துவருபவர் நடிகை அமலா பால். கடந்த ஆண்டு சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில், தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக அமலாபால் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தொழிலதிபர் அழகேசன் என்பவர் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழைத்ததாக அமலா பால் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் காவல்துறை கைது செய்தது. இருவரும் ஜாமீனில் உள்ள நிலையில் நடிகை அமலாபால் அளித்த புகார் பொய்யான புகார் உள்நோக்கத்தோடு புகார் அளித்துள்ளதாகவும், காவல்துறை தங்கள் மீது தவறாக வழக்கு பதிவு செய்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வரும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் அமலாபால் அளித்த புகாரில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.