சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
இந்தக் கொடிகம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இந்த நிலையில், அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதற்கிடையில் அமர் மீது மு.க. ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடி படத்தை ஒட்டியது மற்றும் வள்ளூவர்கோட்டத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பான வழக்குகள் பதியப்பட்டன.
இந்த நிலையில் தென்காசி ஆழ்வார்குறிச்சியில் வழக்கு ஒன்று போடப்பட்டது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் இன்று (நவ.2,2023) அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக காணொலி காட்சிகள் வைரலாகிவருகின்றன. முன்னதாக, தன் மீதான புகார்கள், வழக்குகள் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பேசிய அமர் பிரசாத் ரெட்டி, “அனைத்தும் பொய் வழக்குகள், அமரை தடுக்க பார்க்குறாங்க” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“