தொல்லியல் துறை இயக்குநர் (தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பணி) அமர்நாத் ராமகிருஷ்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம் மட்டுமல்ல, அநீதி” என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், "கீழடி ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழை இருந்தால் திருத்துவேன், உண்மையை திருத்த மாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால், நான் குற்றவாளி ஆகிவிடுவேன்” என்று கூறியுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒருமுறை அகழாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டால், அதில் மீண்டும் திருத்தம் செய்ய இயலாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு மத்திய அரசும், இந்திய தொல்லியல் துறையும் (ASI) கோருவதற்கு, தொல்லியல் துறை இயக்குநர் (தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பணி) அமர்நாத் ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கையின் மையக் கருத்துக்களை மாற்ற மறுத்த அவர், மத்திய கலாச்சார அமைச்சர் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார். கீழடி நாகரிகத்தின் முக்கியத்துவம் மற்றும் பழமையை குறைக்கும் முயற்சிகள் குறித்தும் ராமகிருஷ்ணன் கவலை தெரிவித்தார்.
தொல்லியல் துறை இயக்குநர் (தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பணி) அமர்நாத் ராமகிருஷ்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். தொல்லியல் பொருட்கள் இயக்குநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பணியில் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது: “நான் எழுத்துப் பிழைகளை சரிசெய்யலாம், ஆனால், தொல்லியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்த கருத்துக்களை மாற்ற முடியாது. நான் கருத்தை மாற்றினால், நான் ஒரு குற்றவாளி ஆகிவிடுவேன். முதல்நிலை தகவல்களில் மாற்றம் கோரினால், நீங்கள் ஒழுக்க மதிப்பைச் சிதைக்கிறீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அறிக்கை விஞ்ஞான ரீதியாகவோ அல்லது தொழில்நுட்ப ரீதியாகவோ உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியது குறித்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் முதலில் அறிக்கையைப் படிக்குமாறு அவரை வலியுறுத்தினார்.
கீழடி நாகரிகத்தின் பழமையைக் குறைக்கும் முயற்சி உள்ளதா என்ற கேள்விக்கு, ராமகிருஷ்ணன், “அவர்கள் அப்படித்தான் செய்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். “இந்தியா ஒரு பன்மைத்துவ கலாச்சாரத்தைக் கொண்டது. மக்களைப் பற்றி நாம் அறிவூட்ட வேண்டும். அவர்கள் எப்போதும் சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம், மௌரியர்கள் மற்றும் ஹர்ஷவர்தனர் வம்சங்களைப் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் பிற பகுதிகளை ஏன் நீங்கள் பார்க்கவில்லை?” என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இங்கு சங்கம் இருந்தது. இதுவரை, நாம் சங்க காலத்தின் வயதைக் கண்டறியவில்லை.” கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் பி.எஸ்.ஸ்ரீராமனை தொல்லியல் துறை கேட்டது குறித்து, அமர்நாத் ராமகிருஷ்ணன், “அந்தப் பின்னணி இல்லாத ஒரு நபர் எப்படி எதுவும் இல்லை என்று சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
கீழடியில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் இல்லை என்று ஸ்ரீராமன் அறிக்கை சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.