அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 10 இளைஞர்களின் பற்களை தட்டி உடைத்தும் விதைகளை நசுக்கியும் குரூர சித்ரவதை செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் காவல் துறை மீதான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் ஐ.பி.எஸ் அதிகாரி பல்பீர் சிங். இவர் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கியும் விதைகளை நசுக்கியும் குரூரமாக சித்திரவதை செய்வதாக பகீர் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
அம்பாசமுத்திரம், சிவந்திபுரம் மாயாண்டி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தனது நண்பர் பிரச்னையில் தட்டிக்கேட்டபோது, ஏற்பட்ட பிரச்னையில் காவல் நிலையத்தில் தன்னையும் தனது சகோதரர்களையும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வைத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்க் ஜல்லி கற்களை வாயில் வைத்து தேய்த்து சித்திரவதை செய்ததோடு, பற்களைத் தட்டி உடைத்து பிடுங்கியதாகக் கூறுகிறார். மேலும், பல்வீர் சிங்க் தங்களைக் கொடூரமாகத் தாக்கியதாக கூறுகிறார். மேலும், தனது பல் பிடுங்கப்பட்டதையும் காட்டுகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்ததாக கூறப்படும் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இவை கூடுதல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து வாலிபரின் பற்களைப் பிடுங்கி எடுத்ததாக பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
கணவன்-மனைவி விவகாரம், சிசிடிவி கேமராவை சேதப்படுத்தியது மற்றும் கடன் கொடுத்த விவகாரங்களில் கைது செய்யப்பட்டவர்கள் என சிறிய விவகாரங்களில், காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் அவர்களின் பற்களைப் பிடுங்கி விதைகள் நசுக்கியதாக குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
மேலும், இது போன்ற சிறிய குற்றங்களில்கூட, பற்களைப் பிடிங்கி, விதைகளை நசுக்கி குரூரமாகத் தாக்கி காவல் நிலைய சித்திரவதை செய்யும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனா, புரட்சி பாரதம் உள்ளிட்ட சில அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.