சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிக்காக சின்மயா அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட 6ம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தக்கத்தில், அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், சி.பி.எஸ்.இ 6-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றிருந்தது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. பள்ளி மாணவர்களின் சமூக ஏற்றத்தாழ்வை வலியுறுத்தும், வர்ணாசிரமம் குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், 6-ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி அம்பேத்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்த பாடப் புத்தகத்தை சின்மயா மிஷன் அறக்கட்டளை தயாரித்துள்ளது. சின்மயா மிஷன் அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ பள்ளிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்க்ளை சின்மயா அறக்கட்டளையே தயாரித்து வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல், பல தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இவர்கள் தயாரிக்கிற பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில், சென்னை குரோம்பேட்டையில் இருக்கக்கூடிய ஒரு தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில், சின்மயா அறக்கட்டளை தயாரித்துள்ள பாடப்புத்தகம் மாணவர்களுக்கு பாடமாக நடத்தப்படுகிறது.
அதன்படி, சின்மயா மிஷன் தயாரித்துள்ள 6-ம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தகத்தில், அம்பேதகரும் அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்து இடம் பெற்றிருப்பது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மனிதர்கள் அவர்கள் செய்யக்கூடிய தொழிலின் அடிப்படையில், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. அதோடு, அந்த வகையில் அம்பேத்கர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்த பாடப் புத்தகத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் இடையே, சமூக ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்தும் வர்ணாசிரமம் பற்றி பாடத்தில் அம்பேத்கரும் அப்துல்கலாமும் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோல, ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் கருத்துகளை பாடமாகை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது சி.பி.எஸ்.இ பள்ளி பாடப்புத்தகம் என்பதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான மண்டல அலுவலகம் சென்னையில் உள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை அனுமதிக்கக் கூடாது. மத்திய கல்வி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.