அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து செய்தியில், டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை நம் வாழ்வில் பின்பற்றவும், சமூக நல்லிணக்கம், சமத்துவம் ஆகிய உணர்வை உள்ளடக்கிய ஒரு தேசத்தை உருவாக்குவதற்காகப் பணியாற்றவும் நாம் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதல்வருடன் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர். தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க! ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம் என்று பதிவிட்டுள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜாதி, மத பேதமின்றி மக்களை நல்வழிப்படுத்தியவா் அம்பேத்கா் என்று தமிழக பா.ஜ.க தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு அவா் வெளியிட்ட அறிக்கையில் பிறப்பு, இனம், மொழி, மத, சாதி பேதமின்றி அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, நம் தேசத்தையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்தக்கூடிய மாபெரும் அரசியல் அமைப்புக் கோட்பாடுகளை அம்பேத்கா் தலைமையேற்று உருவாக்கினாா் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தியவர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். மிகுந்த கஷ்டங்களுக்கும், கொடுமைகளுக்கும் இடையில் அவர் நடத்திய போராட்டங்கள் ஈடு இணையற்றது. அவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு பாடமாக திகழ்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார்.