டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் இடைநீக்கம்!

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் இடைநீக்கம்

சட்ட மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் சி.சொக்கலிங்கம் அளித்த தகவலில், கல்லூரியில் மொத்தம் 2 ஆயிரத்து 348 மாணவ, மாணவியர் சட்டம் படித்து வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் காரணமாக மீண்டும் அதுபோன்றதொரு சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கல்லூரி நிர்வாகமும், சட்டக்கல்வி இயக்ககமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 ஆண்டு எல்எல்பி பயிலும் மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை கல்லூரி நிர்வாகம் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தது. கல்லூரியில் சுமூகமான சூழல் நிலவி வரும் வேளையில் தேவையில்லாமல் மாணவர்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தியதாக விடுதி தங்கி படிக்கும் மாணவர்களான சித்தார்த்தன், ஜெபசிங் இன்பராஜ், விஜயேந்திரன், காந்தராஜன், பிரகாஷ் ஆகிய 5 பேரும், அதே போல விடுதியில் தங்கி படிக்காத மாணவர்களான காமேஷ், அஜித், சரத்குமார், மதன் மற்றும் ஷாம் ஆகிய 5 பேரும் என மொத்தம் 10 மாணவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை குறித்து கல்லூரி மூத்த பேராசிரியர் விஜயலட்சுமி ராமலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல விடுதியிலும் பேராசிரியர்கள் அருண், சின்னு மற்றும் உடற்கல்வி இயக்குநர் முத்து ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சில மாணவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டக்கல்வி இயக்குநருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த 10 பேரில் ஜெபசிங் இன்பராஜ் என்ற நான்காமாண்டு மாணவரை திருச்சி அரசு சட்டக்கல்லூரிக்கும், விஜயேந்திரன் என்ற மூன்றாமாண்டு மாணவரை மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கும், காந்தராஜன் என்ற மூன்றாமாண்டு மாணவரை கோவை அரசு சட்டக்கல்லூரிக்கும், ஷாம் என்ற இரண்டாமாண்டு மாணவரை செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரிக்கும் இடமாற்றம் செய்து சட்டக்கல்வி இயக்குநர் டாக்டர் என்.எஸ்.சந்தோஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இனி வரும் காலங்களில் கல்லூரியில் படிப்பதைத் தவிர்த்து வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறையைத் தூண்டினாலோ சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதுடன், அவர்களை கல்லூரியில் இருந்து நீக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த சிலநாட்களாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் ஏப்ரல்16 ஆம் தேதி முதல் கல்லூரி வழக்கம்போல செயல்படும் என முதல்வர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

×Close
×Close