சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடியின் வீட்டில் கைப்பற்றி ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. வணங்காமுடி சட்டவிரோதமாக என்ஆர்ஐ (வெளிநாட்டு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது. கடந்த 2016-17 கல்வியாண்டில் 74 மாணவர்களுக்கு அனுமதி அளித்ததில் எந்தவிதமான முறையான ஆவணங்களோ, சான்றிதழ்களோ இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் வெளிநாடு வாழ் பெற்றோர், வெளிநாடு வாழ் பாதுகாவலர், ஸ்பான்ஸர் ஆகிய 3 பிரிவுகளில் 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இடங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி மற்றும் சட்டப் பல்கலைக்கழக நிதி இயக்குனர் ஜெய்சங்கர், தொலைதூர கல்வி இயக்குனர் சர்வாணி, பதிவாளர் பாலாஜி துணைப் பதிவாளர் அசோக்குமார், நிர்வாக அதிகாரி ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில் 74 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. என கூறி லஞ்ச ஒழிப்பு துறை அண்மையில் வணங்காமுடியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி வணங்காமுடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இதே போல் மற்ற 5 பேரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மாணவர்கள் சேர்க்கையில் எந்த விதமான முறைக்கேடுகளும் ஏற்படவில்லை எனவும். தவறாக தங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும். இந்த வழக்குகளில் கைது செய்து விசாரணை செய்யும் அளவிற்கு மிகைப்படுத்தியே காவல் துறை தரப்பில் தெரிவிப்பதாகவும், எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களுக்கு எதிரான மாணவர்கள் சேர்க்கை முறைக்கேடு புகார் மற்றும், வேறு பல புகார்களும் இவர்கள் மீது உள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவே இந்த நிலையில் முன் ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மாணவர்கள் சேர்க்கை முறைக்கேடு புகாரை தொடர்ந்து முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி வீட்டில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றி ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, முன் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தார்.