என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்த்ததில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்த வழக்கில், முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி உள்ளிட்ட ஆறு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.
சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. வணங்காமுடி சட்டவிரோதமாக என்ஆர்ஐ (வெளிநாட்டு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது. கடந்த 2016-17 கல்வியாண்டில் 74 மாணவர்களுக்கு அனுமதி அளித்ததில் எந்தவிதமான முறையான ஆவணங்களோ, சான்றிதழ்களோ இல்லை என்றும் இந்த இடங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக சட்டப்
பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி மற்றும் சட்டப் பல்கலைக்கழக நிதி இயக்குனர் ஜெய்சங்கர், தொலைதூர கல்வி இயக்குனர் சர்வாணி, பதிவாளர் பாலாஜி துணைப் பதிவாளர் அசோக்குமார், நிர்வாக அதிகாரி ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை
வழக்குப் பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி வணங்காமுடி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் முன் ஜாமீன் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமீன் அளிப்பதாகவும், ஒரு வாரத்திற்கு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது நேரில் ஆஜராக வேண்டும். அனைவரும் தங்களின் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனைவருக்கும் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.