சென்னை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே டாக்டர் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடுவரம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை கடந்த ஞாயிற்றுகிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்பேத்கர் சிலையானது, அம்பேத்கர் இளைஞர் அணி நற்பணி மன்ற உறுப்பினர்களால் நிறுவப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நெடுவரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள், சிலை சேதமடைந்துள்ளது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
டாக்டர் அம்பேத்கர் சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலையின் கை விரல் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில் “ புத்தாண்டு அன்றுதான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 19- 22 வயதுக்குள்ளாக உள்ள 6 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்று கூறினர்.
அம்பேத்கர் சிலைகள் இதுபோன்று அவமதிக்கப்படுவது, முதல்முறையல்ல . தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற சமப்வம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில் “திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
விடியா ஆட்சியில் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,பெண்கள், பொதுமக்கள்,தலைவர்கள் சிலைகளென யாருக்குமே பாதுகாப்பில்லாத இந்த ஆட்சியில் இனியேனும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் விழிப்புடன் செயல்படவும், இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.