ஆம்பூர் கலவரம் வழக்கு: 22 பேர் குற்றவாளி; அஸ்லம் பாஷா சொத்துகளைp பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு

ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 7-வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 7-வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ambur judgement

அப்போதைய எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மே 24-ம் தேதி மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி அவருடைய கணவர் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

Advertisment

இந்த புகார் தொடர்பாக விசாரித்த பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ், பவித்ரா மாயமானது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஷமீல் அகமது கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின், ஷமீல் அகமது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு உறவினர்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். 

ஆனால், ஷமீல் அகமதுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் வேலூர் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஷமீல் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் ஷமீல் அகமது தாக்கப்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், ஆம்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவல்துறையைக் கண்டித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

Advertisment
Advertisements

ஷமில் அகமதுவைத் தாக்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சபாரத்தினம், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஷமீல் அகமது உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து ஷமில் அகமது உயிரிழப்பு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காவல்துறையைக் கண்டித்து ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கலவரமாக மாறியது. ஆம்பூர் கலவரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது.

காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தது. இதில் வேலூர் எஸ்.பி.செந்தில்குமாரி  மற்றும் 15 பெண் காவலர்கள் உள்பட 54 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த ஆம்பூர் கலவரம் தொடர்புடைய 191 பேர் மீது காவல் துறையினர் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

ஆம்பூர் கலவம் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்த வழக்கில் ஆகஸ்ட் 28-ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக கூறியது.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சியாமளாதேவி, வேலூர் எஸ்.பி மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 7-வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அப்போதைய எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். 7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் 26 பேர், 2-வது பிரிவில் 35 பேர், 3-வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tirupattur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: