காங்கிரஸ் கட்சி 5 மாநிலத் தேர்தல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்த கருத்து விவாதமான நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான என் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று அமெரிக்கை நாராயணன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அமெரிக்கை நாராயணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ அன்புள்ள மாநிலத் தலைவர் அழகிரி அவர்களே, 12.3.2022 தேதியிட்டு என் கையில் 14.3.2022 கிடைத்த கடிதம் பற்றி, எந்தத் தலைவரையும் தனிப்பட்ட வகையில் தவறாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை; என்னுடைய நேர்காணலில் கட்சிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். திரு. பழனியாண்டி அவர்கள் தலைவராக இருந்தபோது 1988ல் காந்தி பிறந்தநாளில் கட்சியில் சேர்ந்த நான், கடந்த 33 வருடங்களாக நமது கட்சியின் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தின் தியாகங்களை பொதுக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறேன். எதிர்க்கட்சியினரை விமர்சித்து இருந்தேன்.
கட்சி மற்றும் நாட்டு வளர்ச்சிக்காக மட்டுமே என் பேச்சும் செயலும் இருந்தது என்பதை தாங்களும் காங்கிரஸ் தொண்டர்களும் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் நன்கு அறிவார்கள். இருந்தும் என்னை ஊடகப் பொறுப்பில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளீர். அதை என்னிடம் தனியாக பேசாமல், நீங்கள் முதலில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது வருத்தமளிக்கிறது. இருப்பினும், எனது விளக்க கடிதத்தை முதலில் உங்களுக்கு கொடுத்த பின்பே, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட இருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய விதிகளின் (Constitution) படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகிய என்னை விளக்கம் கேட்டு விலக்கும் அதிகாரம் தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள உங்களுக்கு இல்லை என்று நண்பர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கூறிய பின்பும், மாண்புமிகு தலைவர்கள்: காமராசர், கக்க, மூப்பனார், சோ. பாலகிருஷ்ணன் போன்றவர்கள் வகித்த தமிழக காங்கிரஸ் தலைமைபால் உள்ள மரியாதை காரணமாக உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல விழைகிறேன்.
என்னுடைய பேட்டி வந்த பிறகு, நூற்றுக்கணக்கான தொண்டர்கள், இந்நாள்/முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய/தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், அலுவலக பதவியில் உள்ளவர்கள் மற்றும் பலர் என்னுடன் தொடர்புகொண்டு கட்சி நலனுக்காக துணிந்து கருத்துக்களை சொல்லி வருவதைப் பாராட்டி வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி திருமதி சோனியா காந்தி அவர்களின் தியாகத்தை நான் பட்டியலிட்டதை பாராட்டினார்கள். திருமதி சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வர முடியாது என்கிற சுப்பிரமணிய சுவாமியின் தவறான குற்றச்சாட்டு பட்டி தொட்டிகள் வரை சென்று உள்ளது. அது பொய் என்று தெளிவுபடுத்துகின்ற வகையில், டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சுயசரிதையில் சோனியாகாண்டி அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுக்க இந்திய ஜனாதிபதியாக அவர் தயாராக இருந்தார் என்ற உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை மிகவும் பாராட்டினார்கள்.
இப்படி பலரும் எனது நேரு குடும்பம்/கட்சி/நாடு பற்றிய எனது ஊடக நேர்காணல்களை பாராட்டி வருகையில், கட்சித் தலைமைக்கு எதிராக நான் கருத்துக் கூறியதாக சொல்லி விளக்கம் கேட்ட உங்களது கடிதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. பின்பு, ஒரு நண்பர், சோதிமணி அவர்கள் உங்கள் மேல் சொன்ன குற்றச்சாட்டை பற்றி நான் பேசியதால் இக்கடிதம் எனக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்று கூறினார்.
எது எப்படி இருந்தாலும், நான் இக்கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்கின்ற கருத்துக்களையே, G 23 என்ற அகில இந்திய தலைவர்கள் கொண்ட குழு சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள ஏ.ஐ.சி.சி அவர்களை விளக்கம் கேட்டு எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்நிலையில், நான் ஊடகத்தில் பேசிய பேச்சுக்கு என்னை செய்தித் தொடர்பாளர் என்ற பதவியில் இருந்து விலக்கியது மட்டுமல்லாமல், கட்சிக்கு எதிராக பேசியது ஏன்? என்று விளக்கம் கேட்டு எழுதி இருப்பது, சோதிமணி உங்களைப் பற்றி கேட்ட கேள்வியை நான் தொட்டுப் பேசுவதால் மட்டுமே இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை சட்டம் (1 ஆ, 5 ஆ பிரிவுகள்) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான எனக்கு விளக்கம் கேட்டு எழுதவோ நடவடிக்கை எடுக்கவோ த.நா காங்கிரஸ் தலைவராகிய உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை அறிந்த நீங்கள், வேண்டுமென்றே என்னை விளக்கம் கேட்டு முதலில் ஊடகத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு எனக்கும் கட்சிக்கு அவதூறை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
ஜனநாயகத்தை உருவாக்கியது, மட்டுமல்லாமல் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்த நம் இயக்க தளகர்த்தாவும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களே தான் பிரதமராக பதவி வகித்தபோது நேஷணல் ஹெரால்டு பத்திரிகையில் காங்கிரஸ் ஆட்சியை, நேருஜி அரசாங்கத்தை புனை பெயரில் அவரே விமர்சித்த விபரம் பின்னர் தெரிய வந்தது.
ஆக சமீபத்தில் ஜனநாயகத் தேர்தலை பற்றிய எனது கருத்துக்கள் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், அனுதாபிகள் போன்றவர்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது. அது கட்சி விரோத செயல் ஆகாது என உறுதியாக நான் நம்புகிறேன்.
என்னை நோக்கி ஒரு விரல் நீட்டும்போது உங்களை நோக்கி மூன்று விரல்கள் உள்ளன என்பதை நீர் அறிவீர் என்று கட்சித் தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள். கீரைப்பட்டியில் இருந்து தொடர்ந்து கட்சியை வளர்க்கும் உங்களுக்கு பாராட்டுக்களும் வணக்கமும்.
அன்றியும் எனது கருத்தால் ஏதேனும் ஒரு காங்கிரஸ் தொண்டர்களின் மனம் புன்பட்டிருந்தால் அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.