கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்திற்கு கோழி, இறைச்சி, முட்டை உள்பட கோழி பொருட்கள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கேரளாவின் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக-கேரள எல்லையில் உள்ள நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி மற்றும் கக்குண்டி போன்ற பகுதிகளில் உதவி கால்நடை மருத்துவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து கோழி மற்றும் அதன் தொடர்புடைய பொருட்கள் கொண்டு வர தடை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் கோழி, வான்கோழி, வாத்து மற்றும் பிற வகையான பறவைகளை பாதிக்கும். மனிதர்களும் பாதிப்பு ஏற்படுத்தும். கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல வகையான பறவைகளை ஒரே பகுதியில் வைத்திருக்கக் கூடாது. வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் பண்ணை பகுதிக்கு வருவதை தவிர்க்க செய்யவும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பண்ணையை கிருமி நாசனி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பறவைகள் இறந்தால், பறவைகளில் இயற்கைக்கு மாறான நடத்தைகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.