TN Minister Ponmudi | Governor Rn Ravi: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை மார்ச் 11 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்த நிலையில், பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. மேலும், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் புதன்கிழமை கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கமால், திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ள நிலையில், அவரது திடீர் டெல்லி பயணத்தால் பொன்முடி அமைச்சராகும் தேதி தள்ளிப்போகிறது. ஆளுநர் தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு நாளை சனிக்கிழமை தான் (மார்ச் 16 ஆம் தேதி) சென்னை வரவிருக்கிறார்.
அவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முன்னர் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அமைச்சராக பொன்முடியை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? என்ற சந்தேகமும், சட்டச்சிக்கலும் எழுகிறது. இந்த காரங்களால் பொன்முடி மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“