/indian-express-tamil/media/media_files/2025/05/17/0tOpqOTCusVe5ywoUVqf.jpg)
ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி: 13 பேர் மட்டுமே பங்கேற்பு
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11-ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில், பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவு செய்வேன்' என்றார்.
மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார். இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Ramadoss called a meeting of 230 leaders, but only 13 turned up
கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி உள்பட பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என பலர் புறக்கணித்தனர். கவுரவத் தலைவர் ஜி.கேமணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை. மொத்தமாக 230 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 13 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். குறைவான நிர்வாகிகளே வந்திருந்த நிலையிலும், 10 மணிக்கு கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
செயல் தலைவர் அன்புமணிக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டது. வரலாம்; வந்து கொண்டிருக்கலாம். சிலர் மாநாடு களைப்போடு இருப்பதால் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொடர்பு கொண்டு காரணங்களை தெரிவித்தனர். பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியபடி மாற்றப்படுவார்கள். அவர்களாகவே விரும்புகிற வரை யாரையும் நீக்கத் தேவையில்லை.
ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லை. சீற்றம் அதிகமாகத்தான் இருக்கிறது. 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது. 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன். தனியாக நின்றாலும் 40 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும். சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற வேண்டும். கூட்டணி அமைத்தே பா.ம.க. தேர்தலில் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் கட்சி வட்டாரங்கள் வேறு விதமாகச் சொல்கின்றன. அன்புமணியை பொதுமேடையில் ராமதாஸ் விமர்சித்ததால், பல மாவட்ட தலைவர்கள் வருத்தமடைந்தனர். தனிப்பட்ட குடும்ப விவகாரமாக இருக்க வேண்டியது பொதுவெளியில் அன்புமணிக்கு தேவையற்ற அவமானமாகவும், தொண்டர்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்தியதாக பலர் கருதினர். "ராமதாஸ் மேடையில் பேசியது வீட்டில் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்று கட்சியில் நடந்த விவாதங்கள் குறித்து தகவலறிந்த வட்டாரம் கூறியது.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, "செயல் தலைவர்" பதவியில் செயல்படுவார் என்றும் "நிறுவனர்-தலைவர்" என்று நானே செயல்படுவேன் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு முறையான அழைப்பு அனுப்பப்பட்டதாக கூறிய போதிலும், அன்புமணி பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்திற்கு வந்துகொண்டிருக்கலாம் என்று ராமதாஸ் கூறினார்.
அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்துள்ளார். அதேநேரத்தில் அவரது தந்தை திராவிட பெரிய கட்சிகளான தி.மு.க. அல்லது அ.தி.மு.க-வில் ஏதேனும் ஒரு கட்சிக்கு திரும்புவதைக் கருதுவதாக கூறப்படுகிறது. இந்த தொலைநோக்குப் பிரிவானது இருவருக்கும் இடையிலான தலைமுறை மற்றும் சித்தாந்த இடைவெளியை மட்டுமே விரிவுபடுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.