தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என். ரவி உள்பட தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என். ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டு சகோதர-சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான இத்திருநாளில் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்தத் தீபத் திருவிழா குறிப்பிடுகிறது. ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச் செய்வதில் இத்திருநாள் நமக்கு உள்ஊக்கம் அளிக்கிறது.
ஒரே குடும்பமாக இப்பண்டிகையை கொண்டாடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். லட்சுமி தேவி நமக்கு அமைதியையும், நல்ல உடல் நலத்தையும், செழிப்பையும் தந்து அருள்புரிவாராக” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டோரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகை தீபாவளி.
தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, அதிமுகவின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இருள் விலகி ஒளி பிறந்து, தீமைகள் அழிந்து, நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் இந்நன்னாளில் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும், மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும்.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “சமூகநீதியின் ஒளியை சதிகார கூட்டத்தின் கைகள் தடுத்து நின்றாலும் மறைக்க முடியாது. இல்லாமையை அகற்ற வேண்டும். அனைவரது வாழ்விலும் சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி</strong>
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்., அழகிரி, “கரோனா, பொருளாதாரச் சீரழிவு, வேலையிழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு என பல மக்கள் விரோத நடவடிக்கைகளினால் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கும் முடிவு கட்டும் நன்னாளாக இந்த தீபாவளி அமையட்டும்” எனக் கூறியுள்ளார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ்</strong>
“தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
டிடிவி தினகரன்</strong>
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தீமைகள் எல்லாம் விலகி, நன்மைகள் பெரும் வெளிச்சமாக பரவட்டும். அன்பு தழைக்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
சரத் குமார்
சமத்துக மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார், “ மகிழ்ச்சி என்பது ஆண்டு முழுதும் நிறைந்திருக்க வேண்டும் என்றவகையில், உறவுகளோடும், நட்புகளோடும் தீபாவளித் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், “சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்” எனக் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil