பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவாக கூறிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தானே தலைவர் என்றும், அன்புமணி செயல் தலைவர் என்றும் அறிவித்திருந்தார். இதனிடையே தற்போது பா.ம.க.வின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராமதாஸ் எனும் நான் பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை பாமகவின் செயல் தலைவராக நியமிக்கிறேன்" என்று தைலாபுரத்தில் ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், "பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை.
பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சொல்ல முடியாது." என்றுட’ அவர் கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக வழிநடத்துவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பா.ம.க தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பா.ம.க.,வை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.