சென்னையில் அமித்ஷா நிகழ்ச்சிகள் முழு விவரம் தரப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் 20,000 பேரை சந்திக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் விதமாக இன்று இந்த சந்திப்பு நடக்கிறது.
அமித்ஷா, பாஜக.வின் அகில இந்தியத் தலைவர் என்ற அடிப்படையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியினரை தயார் படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே இருமுறை அவரது சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு, தள்ளிப் போனது. கடைசியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வந்து சென்றார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று ( ஜூலை 9-ம் தேதி ) அமித்ஷா சென்னை வருகிறார். பகல் 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் அமித்ஷாவுக்கு பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஐபி கோல்டன் பீச் அரங்கிற்கு அமித்ஷா செல்கிறார். அங்கு பகல் 12 மணி முதல் 2 மணி வரை முக்கிய நிர்வாகிகளுடன் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கிறார்.
பின்னர் நண்பகல் உண்வை முடித்துக்கொண்டு, அங்கேயே இரவு 9 மணி வரை வெவ்வேறு அமர்வுகளாக நிர்வகிகளுடன் கலந்துரையாட இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இருந்து வாக்குச்சாவடி முகவர் நிலையில் உள்ள சுமார் 14,000 நிர்வாகிகள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் பகுதி நிர்வாகிகளையும் சேர்த்தால் சுமார் 20,000 நிர்வாகிகளுடன் அமித்ஷா பேச இருக்கிறார். அடுத்த சில மாதங்களில் பூத் வாரியாக கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய அஸைன்மென்ட்களை இந்தக் கூட்டத்தில் அமித்ஷா வெளியிடுவார் என கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
நாடாளுமன்ற வாரியாக ஒவ்வொரு சமூகத்தினரின் எண்ணிக்கை பலம், மொழி சிறுபான்மையினரின் எண்ணிக்கை ஆகியவை குறித்து நிர்வாகிகள் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதற்கேற்ப சில வியூகங்களை அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக.வின் சகோதர அமைப்புகளான இந்து முன்னணி, வி.ஹெச்.பி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து கருத்து கேட்கிறார் அமித்ஷா. கட்சி சாராத பாஜக அபிமானிகள் சிலரும் அவரை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவே ஜூலை 7-ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அமித்ஷாவின் விசிட், தமிழக அரசியலில் தங்களுக்கு திருப்புமுனையாக அமையும் என பாஜக நிர்வாகிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.