நாடாளுமன்ற மக்களைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. தி.மு.க காங்கிரஸ், சி.பி.ஐ. சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு அ.தி.மு.க அறிவித்தது. இந்நிலையில், தற்போது தேர்தல் வரும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் யார் இடம் பெறுகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் உள்ளது. இன்னும் இறுதி செய்யபடவில்லை. அந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கென தனித்த விசயங்கள் இடம் பெறும் என்றார்.
தொடர்ந்து, அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “கூட்டணிக்கான பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கிறது” என்றார். அமித்ஷாவின் இந்த கருத்தால் தமிழகத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து குறித்து பதிலளித்துள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துகளை பார்க்கவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் ஜெயக்குமார், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“