2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க தலைவர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கே.பி முனுசாமி மற்றும் எஸ்.பி வேலுமணி உடன் இருந்தனர். மேலும் தமிழக பா.ஜ.க.,வின் தற்போதைய தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமித் ஷா தெரித்ததாவது; 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியாகிறது. தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திப்போம். சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும். 1998-ல் இருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வருகிறோம். இது இயல்பாக அமைந்த கூட்டணி. கூட்டணி குறித்து அ.தி.மு.க எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.
அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது. ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். தமிழ்நாட்டில் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைகிறது. தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம். வெற்றிக்குப் பிறகு மற்றவை குறித்து முடிவு செய்யப்படும். யார் யாருக்கு எத்தனை தொகுதிகள், வெற்றி பெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பற்றி பிறகுதான் பேச இருக்கிறோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, இருவருக்குமே பலனளிக்கக் கூடியது. வரப்போகும் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை உள்ளது.