போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி, சேலை, டாஸ்மாக், மணல் உள்ளிட்ட ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க தலைவர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கே.பி முனுசாமி மற்றும் எஸ்.பி வேலுமணி உடன் இருந்தனர். மேலும் தமிழக பா.ஜ.க.,வின் தற்போதைய தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி அமைக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
பின்னர் ஆளும் தி.மு.க மீதான தாக்குதல்களைத் தொடுத்த அமித்ஷா, “போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
மேலும், மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என தி.மு.க. பல பிரச்சினைகளை எழுப்பி வருகிறது. பிரச்சினைகளை திசைதிருப்ப தி.மு.க. முயற்சி செய்கிறது. மக்களின் கவனத்தை திசைதிருப்பவே நீட் விவகாரம் குறித்து தி.மு.க. பேசி வருகிறது. நீட் விவகாரத்தில் அ.தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.
தமிழ், தமிழ் என்று கூறும் தி.மு.க., தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்பதை பட்டியலிட முடியுமா? தமிழ்நாடு, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ் சங்கமத்தை நடத்தினோம். தி.மு.க மத்தியில் ஆட்சியில் இருந்த போது எந்த தேர்வையும் தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. போட்டித் தேர்வுகளை எல்லாம் இப்போது தமிழ் மொழியில் எழுதுகிறார்கள்.
தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம். பாரதியாரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் நூல்களாக வெளியிட்டவர் பிரதமர் மோடி. தமிழில் பாடநூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழிகளில் படிக்கிறார்கள்.
இன்றும் அண்ணாமலைதான் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கிறார். அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம். அ.தி.மு.க கூட்டணிக்கும், பா.ஜ.க மாநில தலைவர் மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார்.