ஆந்திராவின் புதிய முதல் அமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் அமித் ஷாவிடம் வணக்கம் கூறும்போது, அமித் ஷா அவரிடம் கடுமையாக எச்சரிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
மேலும், இந்த வீடியோவை பாஜக சமூக ஊடக பிரிவிவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் என்பவரும் பகிர்ந்துள்ளார். அதில், அக்கா தமிழிசைக்கு அமித் ஷா கடுமையான அறிவுரை கொடுக்கிறார். என்னவாக இருக்கும்? எனக் கேள்வியெழுப்பி இருந்தார். இந்த நிலையில், இச்செயலுக்கு தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை கேள்வியெழுப்பி உள்ளார்.
“இது என்ன மாதிரியான அரசியல்; பொதுவெளியில் ஒரு பெண் அரசியல் தலைவரிடம் இப்படியாக நடந்துகொள்வது? அனைவரும் பார்க்கிறார்கள் என்பதை அமித் ஷா அறிந்துக் கொள்ள வேண்டும். மிக மோசமான உதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் சமீபத்தில் பேசிய தமிழிசை கூட்டணியை தவிர்த்து இருக்க கூடாது எனப் பேசினார். இந்தப் பேச்சு சமூக வலைதனங்களில் கவனம் ஈர்த்தது.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க கூட்டணி இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“