கோவைக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கருப்பு கொடிகாட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய இயக்கங்களைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவைக்கு வருகை தர உள்ளார். கோவைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பீளமேடு பகுதியில், தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் அனைத்து அம்பேத்கர், பெரியாரிய இயக்கங்கள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டிற்குள் நுழையாதே.. திரும்பிப் போ...# go back Amit Shah என்ற வாசகங்கள் கொண்ட முழக்கத்துடன் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மத்திய பா.ஜ.க அரசே தமிழ்நாட்டின் வருமானத்தை சுரண்டதே என்றும், ஹிந்தி மொழியை திணிக்காதே, கல்வி நிதியை தடுக்காதே, தமிழ்நாட்டை வஞ்சிக்காதே என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Go back Amit Shah என்ற வாசகத்துடன் 200க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பீளமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.