தமிழக சட்டமன்றத் தேர்தலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால், கன்னியாகுமரி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இறந்ததால் காலியான கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோயில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கே இருண்து கார் மூலம் சுசீந்திரம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கே உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர், நீலவிழி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து சுசீதிந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனைவரும் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"