அமித்ஷா சென்னை வருகை: தமிழக பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு!

வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

By: November 21, 2020, 8:25:47 AM

Amit Shah Chennai Visit: பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.

கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கறிஞர்களை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது. இதில், தமிழக பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு, மதியம் 1.45-க்கு அங்கிருந்து காரில் புறப்படும் அவர், கத்திபாரா, கிண்டி, மத்திய கைலாஷ், அடையாறு வழியாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார். அப்போது வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வழி நெடுக நடைபெறுகின்றன. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலை சென்றடையும் அமித்ஷா அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

கலைவாணர் அரங்க நிகழ்ச்சி விபரம்

பின்னர், மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். அதோடு விழாவில் பேருரையும் ஆற்றுகிறார்.

விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலஸுக்கு வரும் அமித்ஷா, இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்ட குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

இரவு ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை 10 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார் அமித்ஷா.

பேரறிவாளனுக்கு ஆதரவாக குரல்: ட்விட்டரை கலக்கிய பிரபலங்கள்

பாதுகாப்பு பணிகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரமுகர்கள் பட்டியலில் இருப்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையம் முதல், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரையில் வழி நெடுகிலும் 10 அடி தொலைவுக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம், அமித்ஷா தங்கும் லீலா பேலஸ் ஓட்டல் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Amit shah chennai visit home minister amit shah tamil nadu bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X