தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்புக் கொண்டு உள்துறை அமைச்சர் மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவரித்து கூறினார்.
இந்த நிலையில் அமித் ஷா ட்விட்டரில், “தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன்.
மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்தேன். ஏற்கனவே NDRF போதுமான அளவுக்கு அங்கே உள்ளது மற்றும் கூடுதல் படைகள் மேலும் உதவிக்கு தயாராக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தற்போது புயல் ஆந்திரா மாநிலம் அருகே நிலைகொண்டுள்ளது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“